தனியாரின் வேட்டைக்காடாகிறதா கோவை?

0
34

இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மக்களால் விரட்டப்படும் தனியார் நிறுவனங்களையும், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களையும் தமிழகத்தின் தலையில் கட்டும் வேலை படுஜோராக சூடுபிடித்துள்ளது.

அந்தவகையில் லேட்டஸ்ட்டாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தின் பொறுப்பில் கோவையின் தண்ணீர் வளம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக இனிமையான குடிநீர்களில் கோவை சிறுவாணி ஆற்றுத் தண்ணீரும் இடம்பிடித்திருக்கிறது.

நியூட்ரினே, ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை என்று கார்பரேட்டுகளின் நலன் காக்கும் பணிகளைத் தொடர்ந்து, மக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியைக்கூட பன்னாட்டு நிறுவனமான சூயஸிடம் ஒப்படைத்துள்ளது கோவை மாநகராட்சி. 

இதுவரை மாநகராட்சிக்கு வரிகட்டி தண்ணீரைப் பெற்ற மக்கள், இனி, சூயஸ் நிறுவனத்தின் முடிவுகளின்படி தண்ணீரைப் பெற வேண்டும். அந்த நிறுவனம் திறமையானது என்றால், நீர்வளம் குறைந்த நகரங்களை குத்தகைக்கு எடுத்து குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தலாமே. நீர்வளம் அதிகமுள்ள கோவை போன்ற நகரங்களை குறிவைப்பது ஏன் என்று மக்கள் எழுப்பும் வினாக்களுக்கு மாநகராட்சியிடம் முறையான பதில் இல்லை.

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில் பதிக்கப்பட்ட குடிநீர் இணைப்புக் குழாய்களில் பல இடங்களில் கசிவு ஏற்படுகிறது. அதனால் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த முடியவில்லை. புதிய இணைப்புகளுக்கு நிறைய செலவாகும் என்பதால் சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

மாநகராட்சி பொறுப்பில் செய்ய வேண்டிய வேலைகளை தனியாரிடம் கொடுத்தால், இனி, தண்ணீரின் விலையையும், அளவையும் அவர்கள்தானே தீர்மானிப்பார்கள். பெட்ரோல் டீசல் விலையைப் போல நேரத்துக்கு தகுந்தபடி அவர்கள்தான் முடிவு செய்வார்களா போன்ற சந்தேகங்களுடன் போராட்டத்துக்கு தயாராகிறார்கள் மக்கள். இந்தத் திட்டம் குறித்து சூயஸ் நிறுவனம் பேச மறுக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் மழுப்பலான பதில்களே கிடைக்கின்றன.

வெளிப்படைத் தன்மையில்லாத இந்தத் திட்டத்தைப் பற்றி சமூகநீதிக் கட்சித் தலைவரும் வழக்கறிஞருமான பன்னீர்செல்வம் நக்கீரனிடம் கூறியது… “அணைகள் நிரம்பிய கோவை மாநகராட்சியில் தண்ணீரை வினியோகிக்க தனியார் நிறுவனம் என்பது அவமானம். கோவையின் தண்ணீர் வளத்தை இனி அந்த நிறுவனம் மக்களுக்கு எப்படி விற்கப்போகிறது? தனியார் நிறுவனங்களுக்கு எப்படி விற்கப்போகிறது என்பது தெரியவில்லை. விரட்டப்பட்ட குளிர்பான நிறுவனங்களுக்கு இனி கொண்டாட்டம்தான். பம்ப் செட்டுகள் முதல் பாசனத்துக்கு தேவையான உபகரணங்கள் 90 சதவீதம் அளவுக்கு கோவையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட கோவைக்கு தண்ணீர் வினியோகிக்க பிரான்ஸ் நிறுவனம் என்பது வெட்கக்கேடு” என்றார்.

கோவை மாநகராட்சியில் ஓரு லட்சத்து 50 ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு சூயஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு 6666 ரூபாய் அடிப்படையில் எடுத்துள்ளது. அதாவது ஒரு இணைப்புக்கு மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அரசுக்கு இந்த நிறுவனம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையை மக்களிடம் எப்படி எந்த அடிப்படையில் சூயஸ் நிறுவனம் வசூலிக்கப்போகிறது என்று நினைத்தாலே பதற்றமாக இருப்பதாக சாதாரண மக்கள் புலம்புகிறார்கள்.

வசதிபடைத்தோருக்கு ஒரு மாதிரியாகவும், ஏழை நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு ஒருமாதிரியாகவும் தண்ணீர் வினியோகம் இருக்கும் என்றும் பயப்படுகிறார்கள்.

ஏற்கெனவே இந்த நிறுவனம் குடிநீர் வினியோகப் பொறுப்பை ஏற்றிருந்த மாளவியா நகரில் இதுபோன்ற குளறுபடிகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து அந்த நகர மக்கள் சூயஸ் நிறுவனத்தை வெளியேறும்படி போராடுகிறார்கள். கோவையில் இனி வீட்டு இணைப்புகள் மட்டுமே இருக்குமா? பொதுக்குழாய்கள் இருக்குமா என்ற வினாக்களுக்கு சரியான பதில் இல்லை. குடிநீர் இருப்புக்கு ஏற்ப சூயஸ் நிறுவனம் விலையை நிர்ணயம் செய்தால் என்னாவது?

நாம் தமிழர் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் நம்மிடம் பேசும்போது… “வரும் ஆண்டுகளில் ஏற்படப்போகும் தண்ணீர் பற்றாக்குறையை மனதில்கொண்டே இந்த முடிவு என்று கோவை மாநகராட்சி கூறுகிறது. தண்ணீர் வினியோகத்தை தனியார் நிறுவனங்கள் கையில் எடுப்பது உலக அளவிலான சதி. நிலத்தடி நீர் இனி நில உரிமையாளருக்கு இல்லை என்ற நிலை வரப்போகிறது. தண்ணீர் இனி மனிதனின் அடிப்படை உரிமையின் கீழ் வராது. இனி வர்த்தகப் பொருட்களின் பட்டியலில் சேரப்போகிறது” என்றார்.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனிடம் பேசினோம்… “பழைய குழாய் இணைப்புகள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளன. அதிக அளவில் குடிநீர் வீணாகிறது. குழாய்களை மாற்ற பெரும் தொகை தேவை என்பதால்தான் சூயஸிடம் குத்தகைக்கு விட்டிருக்கிறோம். தண்ணீர் விலையை மாநகராட்சியும் அரசுமே நிர்ணயிக்கும். தேவைக்கேற்ப பொதுக்குழாய்கள் இருக்கும்” என்றார்.

கோவை மக்களிடம் கருத்துக் கேட்காமல் ஒரு திட்டம் அரங்கேறப்போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here