அமித் ஷா தலைமையில் கிரிமினல்களை ஒடுக்க குழுவாம்!

0
50

நேரடியாக மூக்கைத் தொடுவதற்கு பதிலாக தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதே பாஜகவின் பாணி. நீதிமன்றத்தையும் மக்களையும் ஏமாற்றவே இதுபோன்ற பல பாணிகளை பாஜக கைவசம் வைத்திருக்கிறது.

இஸ்லாமியர்களையும், தலித் மக்களையும் அடித்துக் கொல்வதற்கு குண்டர்களை உருவாக்குவதும் பாஜகதான். மாட்டுக் கறி தின்றான் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் போட மறுத்தான் என்றும் இதுவரை 400க்கு மேற்பட்ட அப்பாவிகளை காவிக் குண்டர்கள் கொன்றிருக்கிறார்கள்.

அப்படிக் கொன்றவர்கள் மீது இதுவரை கடுமையான நடவடிக்கை எதையும் சம்பந்தப்பட்ட பாஜக அரசுகள் மேற்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக அந்த மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சான்றிதழ் கொடுத்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இந்நிலையில்தான், அப்பாவிகளை கும்பலாக தாக்கி கொலை செய்வதைத் தடுக்க 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை அறிவித்திருந்தது. அதை இத்தனை மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு இப்போது மீண்டும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதும் தூசு தட்டியிருக்கிறது.

பசுக்குண்டர்களையும், ஜெய் ஸ்ரீராம் குண்டர்களையும் தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக செயலாளர் தெரிவித்திருக்கிறார். இந்தக் குழுவுக்கு தலைவர் யார் தெரியுமா? சாட்சாத் உள்துறை அமைச்சர் அமித் ஷா தான். இந்த அறிவிப்பைக் கேட்டதும், அரசியல் விமர்சகர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்களாம்.

ஆனால், அமித் ஷா தலைவரானதும், தாக்குதல் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஒரு பகுதியினரும், தாக்குதல் குறைய வாய்ப்பு இருப்பதாக ஒரு பிரிவினரும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியோ தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட்டால் நாட்டுக்கு நல்லது.

சமூகநீதியைக் காவு வாங்கும் மனுநீதி!

1990ஆம் ஆண்டுவரை இந்தியாவில் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும், இந்தக் கோரிக்கை நீண்ட நெடுங்காலமாக அரசியல் கட்சிகளால் வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஆனால், அந்தக் கோரிக்கையை ஆய்வுசெய்ய 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அன்றைய ஜனதா அரசு பி.பி.மண்டல் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷன் 1983 ஆம் ஆண்டு தனது ஆய்வறிக்கையை இந்திரா தலைமையிலான அரசிடம் சமர்ப்பித்தது. இந்தியா முழுவதும் 52 சதவீதம் மக்கள் பிற்படு்ததப்பட்டோராக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆனால், மத்திய அரசுப் பணிகளில் 27 சதவீதம் வழங்கவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அளவு மொத்தமாக 49 சதவீதமாக இருக்கும்படியும் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையை இந்திரா தலைமையிலான அரசு அமல்படுத்துவதற்கு முன் அவர் படுகொலை செய்யப்பட்டார். பின்னர் வந்த ராஜிவ் அரசும் இந்தப் பரிந்துரையை அமல்படுத்துவதில் காலந்தாழ்த்தி வந்தது. இந்நிலையில்தான், 1989ஆம் ஆண்டு வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தது. அந்தச் சமயத்தில் கூட்டணிக் கட்சியான பாஜகவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தினார் வி.பி.சிங். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்தப்பட்ட அந்த இடஒதுக்கீடு பரிந்துரைகள் இன்றுவரை பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையாக சென்றுசேரவில்லை என்பதே நிஜம்.

வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் ஆகஸ்ட் 1990ல் அரசு அறிவிப்பு வெளியானது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தது. மண்டல் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு 24 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றுவரை மத்திய அரசு அமைச்சகங்களில் ஏ பிரிவு அதிகாரிகளாக 17 சதவீதம் பேரும், பி பிரிவில் 14 சதவீதம் பேரும், சி பிரிவில் 11 சதவீதம் பேரும், டி பிரிவில் 10 சதவீதம் பேரும் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்டோர் பணி நியமனம் பெற்றுள்ளனர். இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட உண்மைகளாகும். மத்திய அரசின் மையமாக இருக்கும் அமைச்சரவை செயலகத்தில் ஏ பிரிவு அதிகாரி பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஒருவர்கூட நியமிக்கப்படவில்லை என்பது இன்னும் பெரிய கொடுமை.

பிற்படுத்தப்பட்டோரின் நிலைமை இப்படி இருக்க, உயர்சாகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு மோடி அரசு தனது ஆட்சியின் கடைசி கட்டத்தில் அறிவித்தது. அந்த அறிவிப்பை அமல்படுத்திய வேகமும், முறையும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் எனப்படும் முன்னேறிய வகுப்பினர் யார் என்று அரசு கூறியுள்ள விளக்கம் வேதனையைத்தான் ஏற்படுத்துகிறது. ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம், 5 ஏக்கர் நிலம், 1000 சதுர அடி வீடு கொண்டோர் அனைவரும் ஏழைகள் என்ற பட்டியலில் வருகிறார்கள்.

இந்த அடிப்படையிலான அரிய வகை ஏழைகளுக்கு 2019-20 கல்வி ஆண்டிலேயே உயர்படிப்புகளில் இந்த ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்டோரின் பொருளாதார வரம்பு 72 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரிய வகை உயர்சாதி ஏழைகள், வருமான வரி கட்டினாலும் ஏழைகள்தான் என்ற மோடி அரசாங்கத்தின் முடிவுக்கு பெயர்தான் மனுநீதி என்கிறார்கள்.

ஒன்பது கோள்களும் உச்சம்பெற்ற ஒருவன் கோடீஸ்வரனாக இருந்தாலும் எல்லோரையும் காட்டிலும் ஏழையாக கருதி முன்னுரிமை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்கிற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுநீதி இப்போது மீண்டும் அமலாகத் தொடங்கியுள்ளது.

அதன் வெளிப்பாடுதான், காலங்காலமாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிலும் குறைவான கல்வித் தகுதியும், அதிகமான பொருளாதார வசதி பெற்றிருந்தாலும் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற அடாவடியை மோடி அரசு அமலாக்கியுள்ளது.

இதன்மூலம் காலங்காலமாக அறிவில் சிறந்தோராக தங்களை அடையாளப்படுத்தி வந்தவர்களின் கல்வித் தரத்தை அரசாங்கமே அம்லப்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, இட ஒதுக்கீடை பிச்சை என்று கேலி பேசிய அதே உயர்சாதியினர், கல்வியில் பின்தங்கியோரைக் காட்டிலும் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், இட ஒதுக்கீடு பிச்சையில் வேலை வாய்ப்பை பெறும் நிலைக்கு வெட்கமில்லாமல் தயாராகி இருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளிப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப்இந்தியா தேர்வு எழுதியோரில் வேலைக்கு தகுதியானோர் பெற வேண்டிய மதிப்பெண்கள் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாகியது. அதாவது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்  குறைந்தபட்சம் 61.5 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினத்தோர் 53,75 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆனால், முன்னேறி வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் வெறும் 28.5 மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. தமிழகத்தில் இந்த நிலை என்றால், மேற்கு வங்கத்தில் சைபர் மதிப்பெண் எடுத்திருந்தாலும் வேலை என்ற கொடுமையான அறிவிப்பு வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அந்தக் கொந்தளிப்பு அடங்குவதற்குள், அஞ்சலகத்துறை தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் பணியைப் பெற நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் நிலவரத்தை அறிந்தபோது உயர்சாதியினரின் கடந்தகால ஒடுக்குமுறை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிப்படையாகவே அறியமுடிந்தது.

அதாவது, பொதுப்பிரிவினர் 95.2 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோர் 95  மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்டோர் 94.8 மதிப்பெண்களும், பழங்குடியின மக்கள் 89.6 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். மேலும், செவித்திறன் குறைபாடுள்ளோர் 64.2, வேறு உடல்குறை உள்ளோர் 78.4, பார்வைக் குறை உள்ளோர் 85.8, கை, கால் முடக்கம் உள்ளோர் 88.8 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கை, கால் முடக்கப்பட்டோரைவிட, பார்வைக் குறைபாடு உள்ளோரைவிட முன்னேறிய சாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானமுள்ள அரியவகை ஏழைகள் முன்னுரிமை பெற்றிருந்தனர். இது அவமானகரமான நடவடிக்கை என்றாலும், இந்த நவீன காலத்திலேயே இப்படி அப்பட்டமாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரின் வாய்ப்புகளை பறிக்கிறார்கள் என்றால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இவர்கள் எப்படியெல்லாம் ஆட்டம் போட்டிருப்பார்கள் என்று சிந்திக்கத் தூண்டியிருக்கிறது இந்தக் கொடுமை.

ஆம். ஒரு நூற்றாண்டு போராட்டத்தின் சமூகநீதி பலனை, அவர்கள் ஒரே அறிவிப்பில் அறுவடை செய்ய முடியும் என்றால், அதன் பெயர்தான் மனுநீதி என்கிறார்கள். பிற்படுத்தப்பட்டோரையும் தாழ்த்தப்பட்டோரையும் இன்னொரு சமூகநீதிப் போராட்டத்துக்கு தயார் செய்ய இந்த மனு அநீதி பயன்படும் என்றே சமூகநீதி போராளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 

பிரச்சனை ஒன்று – அதிமுகவின் வேஷம் ரெண்டு!

இஸ்லாமியர்களின் சிறப்பு உரிமை ஒன்றை பறித்திருக்கிறது பாஜக அரசு. அதுவும் இஸ்லாம் அனுமதிக்காத ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி, அதற்கு தண்டனை பெற்றுத்தருகிற வகையில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இதன்மூலம் இஸ்லாமில் பெண்களுக்கு எதிரான விதிகள் இருப்பதைப் போலவும் அதில் ஒன்றை சீரமைத்திருப்பதைப் போலவும் காட்டியிருக்கிறது மோடி அரசு.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தே இந்த சட்டம் இயற்றப்பட்டிருப்பதைப் போல மோடி அரசு மார்தட்டுகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி தின்றார்கள் என்றும், ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல மறுத்தார்கள் என்றும் கும்பலாகச் சேர்ந்து வெறித்தனமாக கொலை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை ஏன் மோடி அரசு காதில் வாங்கவில்லை என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

இந்த லட்சணத்தில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டதால் இந்தியாவே மகிழ்ச்சி அடைவதாக மோடி கூறியிருப்பதை பலரும் பலவிதமாக விமர்சிக்கிறார்கள். அதாவது, இஸ்லாம் மீது வன்மம் கொண்ட பாஜக மகிழ்ச்சி அடைகிறது என்பதையே இந்தியா மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியிருக்கிறார் என்கிறார்கள். 

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்றும், இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கிய கட்சி தங்களுடையது என்றும் கூறியிருக்கிறார். ஆனால், இஸ்லாமியர் ஜனாதிபதி ஆனாலும், தலித் ஜனாதிபதி ஆனாலும் இந்து சாமியார் முன் தரையில்தான் அமர வேண்டும் என்ற நிலை இருப்பதை சொல்லவே மாட்டார். பிராமணர் என்றால், அவர் எந்த பதவியில் இல்லாவிட்டாலும் இருக்கையில் அமர முடியும் என்ற எதார்த்த நிலையை மறைப்பார்கள்.

முத்தலாக் மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்துள்ளன. தேர்வுக் குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையயும் விடுத்தன. அதையும் மீறி வாக்கெடுப்புக்கு விட்டு, எதிர்த்த சில கட்சிகளை வெளிநடப்புச் செய்யவைத்து மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது. இதை தனது சாதனையாக வேறு பாஜக அரசு கூறிக்கொள்கிறது.

முத்தலாக் விவகாரத்தில் அதிமுக மேற்கொண்ட நிலைப்பாடுதான் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியிருக்கிறது. மக்களவையில் இந்த மசோதா வந்தபோது அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. ஆனால், அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரும், துணை முதல்வர் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத்குமார் இந்த மசோதாவை ஆதரித்து பேசி அதிர்ச்சியைக் கொடுத்தார்.

“இந்த மசோதா மூலம் பெண்களுக்கு சம உரிமைகள் கிடைக்கும். இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்துப் பெண்களுக்கும் சமஉரிமை வழங்கிட ஏதுவாக இருக்கும்” என்று அவர் பேசினார்.

இதுகுறித்து அதிமுகவில் பெரிய புகைச்சலே உருவானதாக கூறப்பட்டது. பாஜகவுக்கு பயந்து சிறுபான்மையினரை காட்டிக் கொடுத்துவிட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், மாநிலங்களவையில் அதிமுகவின் நிலைப்பாடு தெரியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அவர் கூறியபடியே, மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த மசோதாவை எதிர்த்து பேசினார்.

“முத்தலாக்கிற்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. இஸ்லாமில் முத்தலாக்கிற்கு அனுமதி இல்லை என்று அரசு சொல்கிறது. எனவே, இல்லாத ஒரு விஷயத்திற்கு எதற்காக சட்டம்? இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் பேசினார்.

இப்படி பேசிய அவர், மசோதா மீது வாக்கெடுப்பு நடந்தபோது தனது கட்சி உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார். மசோதாவுக்கு 99 பேர் ஆதரவும் 84 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதிமுக உறுப்பினர்கள் 11 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருந்தால் மசோதா தோற்றிருக்கும். 

அதிமுகவின் இந்த நிலைப்பாடு வெட்கக்கேடானது என்று திமுக எம்.பி. கனிமொழி கருத்துத் தெரிவித்தார். முத்தலாக் விஷயத்தில் பாஜகவுக்கு பயந்து இரட்டை நிலை எடுத்த அதிமுக, இறுதியில் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவெடுத்து, அம்பலப்பட்டிருக்கிறது. அதிமுவை நம்பிய சிறுபான்மை இன மக்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்திருக்கிறது என்று இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here