Home > செய்திகள் > விவசாய நிலத்திற்கு செல்ல கூடாதா!

விவசாய நிலத்திற்கு செல்ல கூடாதா!

தமிழக போலீஸுக்கு என்னதான் ஆச்சோ தெரியவில்லை. கொரோனா வைரஸ் கொடுமையைக் காட்டிலும் இவர்களுடைய கொடுமை தாங்க முடியலைனு புலம்புறாங்க. தடி இருக்குன்றதுக்காக யாரையெல்லாம் அடிக்கிறதுன்னு விவஸ்தை இல்லாமலா போய்ரும்.

விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற படித்த இளைஞரை, அதுவும் பாதுகாப்பாக சென்றவரை பிடித்து அடிக்கப்போய் மிரட்டியிருக்கிறார்கள். அவர் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்ச்சாவிட்டால், போலீஸுக்கு சோறு எங்கிருந்து வரும்னு தெரியவேணாம்?

இனி பாதிக்கப்பட்ட தேனி இளைஞரின் வாக்குமூலத்தை பார்க்கலாம்…

“நான் மாஸ்க் N95 மாட்டிக் கொண்டு பைக்கில் தோட்டத்திற்கு சென்றேன். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஊருக்கு வெளிப்புறமாக நின்ற காவல்துறையினர் விவசாய நிலத்திற்கு செல்ல கூடாது என்று லத்தியால் அடிக்க முற்ப்பட்டார்கள். யாரும் இல்லாத ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் நிலத்திற்கு சொல்லக்கூடாது. சரி எப்படி நிலத்திற்கு செல்லாமல் தண்ணீர் பாய்ச்சாமல் அடுத்த 21நாட்களுக்கு மக்களுக்கு எப்படி உணவுப் பொருட்கள் கொண்டு சேர்ப்பது. தற்போது தான் மக்காச்சோளம் விதை முளைத்து உள்ளது. உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும், தென்னைக்கும் சேர்த்து வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதற்காக கொரனாவின் வீரியம் பற்றி தெரியாதவன் நான் இல்லை. உயிர் வேதியியல் துறை மாணவன், தற்போது மருத்துவ கம்பெனியில் சுவாச துறையில் வேலை செய்கிறேன்(Pulmonary segment). ஆனால் இப்படியான சூழ்நிலையில் மக்களை தாக்க முற்படுவதும் விவசாயம் சார்ந்த ஊருக்கு வெளியே தனியாக இருக்கும் விவசாய நிலங்களுக்கு செல்லவிடாமல் காவல்துறையினர் அடிக்க வருவதும் என்னவென்று புரியவில்லை. அடுத்த 21 நாட்களுக்கு அனைத்து விவசாயிகளும் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டால் விவசாய நிலங்கள் என்னவாகும், தனித்திருத்தலுக்கு பிறகும், தற்போதும் மக்களுக்கு உணவு பொருட்கள் எப்படி கிடைக்கும். அது தற்போது உள்ள நிலைமையை மேலும் மோசமாக்கிவிடாதா?” என்று கேட்கிறார்.

Leave a Reply