Home > கட்டுரைகள் > சோறு போடும் விவசாயிகள் பிச்சைக்காரர்களா?மரணமும் தடியடியும்தான் அவர்களுக்கு அரசு தரும் பரிசா?

சோறு போடும் விவசாயிகள் பிச்சைக்காரர்களா?மரணமும் தடியடியும்தான் அவர்களுக்கு அரசு தரும் பரிசா?

சேற்றில் பாடுபட்டு மக்களுக்கு சோறுபோடும் விவசாயிகளின் நிலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

கடனை வாங்கி விவசாயம் செய்து, களத்துமேட்டுக்கு வருவதற்குள் காய்ந்துபோன பயிரைக்கண்டு, வேதனையில் விஷம் குடித்தும், தூக்கில் தொங்கியும் சாகவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

இழப்பீடு கோரி கோவணத்துடன் டில்லியில் சாலையோரம் போராடுகிறான்.

ஆதரவு தருவதாக ஆளுங்கட்சி உள்பட அனைத்துக்கட்சிகளும் விவசாயிகளுக்கு அருகில் அமர்ந்து பேட்டி கொடுக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் கேட்கும் இழப்பீடை இதுவரைக்கும் யாரும் கொடுக்கவில்லை.

நீதிமன்றம்கூட விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக தீர்ப்புக் கொடுத்துவிட்டது.மத்திய மாநில அரசுகள் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஆடம்பர செலவுகளிலும் இலவச திட்டங்களிலும் அரசுப் பணத்தை கொட்டிக்குவிக்கும் அரசுகள் சோறுபோடும் விவசாயிகளை இதுவரைக்கும் கண்டுகொள்ளவில்லை.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

விவசாயிகள் தங்கள் பங்கிற்கு உர்ஜித் படேலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்றபோது அவர்கள்மீது போலீஸைக் கொண்டு கொடூரமாக தடியடி நடத்தியிருக்கிறார்கள்.

சினிமா நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றின் தலைமை பொறுப்புக்கு வந்திருக்கிற நடிகர் விஷாலும் தனது பங்கிற்கு விவசாயிகளை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சித்திருக்கிறார்.

100 ரூபாய், 150 ரூபாய் டிக்கெட்டில் 1ரூபாயை விவசாயிகளுக்காக பிடித்தம் செய்து கொடுக்கப் போவதாக அவர் கூறியிருக்கிறார்.

100 கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமாக்காரர்களுக்கும் லட்சக்கணக்கில் பணம்போட்டு படம் எடுப்பவர்களுக்கும் ஒரே அளவுகோலை வைத்திருக்கிறார்கள்.

விவசாயிகள் வீட்டு பணத்தை வாங்கி அதில் ஒரு ரூபாயை அவர்களுக்கே பிச்சை போடும் இவர்களது புத்தியை எந்த கணக்கில் சேர்ப்பது?

விவசாயத்திற்கு இடுபொருட்கள் அனைத்தையும் இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக பலராலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்தி மறைந்த திகாய்த் இந்தக் கோரிக்கைகளை மிக வலுவாக வற்புறுத்தினார்.தமிழ்நாட்டிலும் நாராயணசாமி தலைமையில் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அதன்விளைவாகத்தான் இங்கே உரமானியம், இலவச மின்சாரம், விதை மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் விவசாயிகளுக்கு கிடைத்தன.

இப்போதும் விவசாயத்துக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக கொடுக்க அரசாங்கத்தால் முடியும்.அப்படி இலவசமாக கொடுக்கும்போது அவர்களுடைய விளைபொருட்களின் விலையும் கட்டுபடியாகும் சூழ்நிலை உருவாகும். விவசாயிகளின் நலனை பாதுகாக்காத, அவர்களை கொண்டாடாத உலகின் எதிர்காலம் சோற்றுக்காக பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

Leave a Reply